×

காலை 8-10 மணி வரையிலும் மாலை 4-6 மணி வரையிலும்திருவள்ளூர் நகரத்திற்குள் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை: போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை

திருவள்ளூர், ஏப். 13: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கனரக வாகனங்கள் திருவள்ளூர் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சவுடுமண் லாரிகளும் திருவள்ளூர் நகரத்திற்குள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதே போல் விபத்துகளும் அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழப்புகளும், கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலையும் தொடர்கிறது.

இதை தவிர்க்கும் பொருட்டு திருவள்ளூர் நகரத்திற்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சவுடுமண் லாரிகள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட போலிஸ் எஸ்பி சிபாஸ்கல்யாண் வாய் வழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட சவுடுமண் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மணிக்கு மேல் 5 நிமிடங்களுக்கு மூன்று வாகனங்கள் செல்வது என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடாமல் எடுத்து செல்வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களின் கண்களில் மண் விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த 4 தினங்களில் சவுடு மண் லாரிகளுக்கு ₹2,000 வீதம் 60 லாரிகளுக்கு ₹1,20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது சோதனை ஓட்டமாக இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுவதாகவும், விரைவில் இது முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட போலிஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

The post காலை 8-10 மணி வரையிலும் மாலை 4-6 மணி வரையிலும்
திருவள்ளூர் நகரத்திற்குள் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை: போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை
appeared first on Dinakaran.

Tags : Lallur ,District Police Department ,Thiruvallur, Ab ,Dinakaran ,
× RELATED கடல் கொந்தளிப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்